குட் நியூஸ்... தமிழகத்தில் சோதனை ஓட்டத்தில் இயற்கை எரிவாயு பேருந்துகள்... எரிபொருள் செலவு எக்கச்செக்கமாக குறையும்!
இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால், வழக்கமான டீசல் பேருந்துகளுடன் ஒப்பிடும் போது, தமிழகம் முழுவதும் எட்டு போக்குவரத்துக் கழகங்களுக்கு எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் யோசனையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னெடுத்துள்ளது.
மாநில அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து, டிஎன்எஸ்டிசி (விழுப்புரம்) மற்றும் எம்டிசிக்கு டீசலில் இருந்து எல்என்ஜியாக மாற்ற தலா ஒரு பேருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மற்றும் சென்னையில் உள்ள அரசு பேருந்துகளை எல்என்ஜியாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"டீசலில் இயங்கி வரும் அரசு பேருந்துகளின் மைலேஜுக்கான எங்களின் தற்போதைய இலக்கு லிட்டருக்கு 5.7 கிமீ ஆகும். ஆனால் இதுவரை அரசு பேருந்துகள் 5.68 கிமீ மைலேஜ் மட்டுமே கொடுத்து வருகிறது. எல்என்ஜி மூலம் இது மைலேஜ் வசதி மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சோதனையை முடித்த பிறகு தான் அது உண்மையிலேயே சாத்தியமா என்பதை தீர்மானிக்க முடியும்" என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து (விழுப்புரம்) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் பேருந்துகளுடன் ஒப்பிடும்போது எல்என்ஜி பேருந்துகளின் இயக்கத்தின் போது காற்று மாசடைவது பெருமளவு குறைவாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தொழில்துறை தரவுகளின்படி, ஒரு எல்என்ஜி பேருந்து முழு கொள்ளளவிற்கு நிரப்பப்பட்ட 180கிலோ கிரையோஜெனிக் தொட்டியுடன் தோராயமாக 850-900 கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும். இருப்பினும், ஒவ்வொரு பயணத்திலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து இது மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீக் ஹவர்ஸில் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால், போக்குவரத்துக் கழகங்களால் ஒரு லிட்டர் டீசலுக்கு 5.7 கிமீ மைலேஜை தொடர்ந்து பராமரிக்க முடியவில்லை. நம்மூர் சாலைகளின் நிலைமை, நெரிசல் மற்றும் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட காரணங்களும் இந்த சோதனையின் போது பரிசீலிக்கப்படும்" என்று இது குறித்து பேசிய அதிகாரி தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டுக்கான போக்குவரத்துத் துறையின் ஆண்டுச் செலவு ரூ. 16,985 கோடியாக இருந்தது. அதில் எரிபொருள் செலவு மட்டுமே ரூ.5,194.68 கோடி. இந்த செலவு, போக்குவரத்து துறையின் ஆண்டு செலவில் 28.35 சதவீதம் வருகிறது. 2018-19 நிதியாண்டில் எரிபொருள் செலவுகள் மொத்த செலவுகளில் 15-18 சதவீதமாக இருந்தது. மேலும், 2022-23 நிதியாண்டில், மாநிலத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழகங்களின் சராசரி தினசரி இழப்பு ரூ.15 கோடியாக இருந்தது. எரிபொருள் விலை உயர்வு போக்குவரத்து நிறுவனங்களுக்கு பெரும் இழப்புகளுக்கான முக்கிய காரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து நிறுவனங்களின் இழப்புகளுக்கு எரிபொருள், பராமரிப்பு, ஊதிய திருத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு போன்றவை முதன்மையான காரணங்களாக இருந்து வருகின்றன. கடந்த 2018 ஜனவரியில் பேருந்து டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டபோது டீசல் விலை லிட்டருக்கு ரூ.63.5 ஆக இருந்தது. தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.93 ஆக உள்ளது. இருப்பினும், டிக்கெட்டுகளின் விலை மாற்றப்படாமல் உள்ளது.
