திருப்பதியில் இன்று நவராத்திரி பிரம்மோற்சவ அங்குரார்ப்பணம் - நாளை கோலாகலத் தொடக்கம்!

 
பிரம்மோற்சவம் திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா எதிர்வரும் அக்டோபர் 12 முதல் 20-ஆம் தேதி வரை 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், விழாவின் தொடக்க நிகழ்வான அங்குரார்ப்பணம் இன்று இரவு கோலாகலமாக நடைபெறுகிறது.

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நிகழ்வாக இன்று இரவு கோயில் மாட வீதிகளில் விஸ்வக்சேனர் தங்கத் திருச்சி வாகனத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் புற்றுமண்ணில் 9 வகையான தானியங்கள் விதைக்கப்படும் பாரம்பரியச் சடங்கான 'பீஜவாபனம்' வைகானச ஆகம விதிகளின்படி சிறப்பாக நடத்தப்படவுள்ளது.

திருப்பதி திருமலை

அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 12-ஆம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா முறைப்படி தொடங்குகிறது. இதையொட்டி தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்பா சுவாமி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டுள்ளன.