நவராத்திரி.. ₹9.9 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட துர்கை அம்மன் சிலை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நவராத்திரி விழாவையொட்டி சுமார் 9.9 லட்சம் ரூபாய் நோட்டுகளால் துர்கை அம்மன் சிலை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஐதராபாத்தில் இயங்கி வரும் சுவாமி தயானந்தா இளைஞர் நலச் சங்கம் சார்பில் நவராத்திரி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகப் பூஜை பந்தல் அமைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வீற்றிருக்கும் துர்கை அம்மன் சிலைக்கு ₹100, ₹200 மற்றும் ₹500 ஆகிய மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அம்மன் சிலையும் அதன் பின்னணியும் புதிய ரூபாய் நோட்டுகளால் பின்னப்பட்ட கண்கவர் மாலைகள் மற்றும் தோரணங்களால் மிகவும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்மன் ரூபாய் நோட்டுகளாலான சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போன்ற இந்தக் காட்சியைக் காண்பதற்கும், அம்மனைத் தரிசித்து அருள் பெறுவதற்கும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பந்தலில் திரண்டு வருகின்றனர்.
மேலும், இந்த அரிய 'ரூபாய் நோட்டு' அலங்காரத்தில் காட்சியளிக்கும் துர்கை அம்மனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன.
