நயன்தாராவுக்கு 60 அடி உயர கட்-அவுட்... 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்காக செம கெத்து!
தமிழ்த் திரையுலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'மூக்குத்தி அம்மன் 2'. ஆன்மீகமும் நகைச்சுவையும் கலந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக நடிகை நயன்தாராவுக்காக பிரம்மாண்டமான முறையில் 60 அடி உயரத்தில் கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே ஒரு முன்னணி நடிகைக்காக அமைக்கப்படும் மிக உயரமான கட்-அவுட் இதுவே ஆகும் என்று படக்குழுவினர் மிகுந்த பெருமிதத்துடன் அறிவித்துள்ளனர்.
பொதுவாகத் தமிழ்சினிமாவில் முன்னணி நாயகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் பட வெளியீட்டின் போது மட்டுமே இதுபோன்ற பிரம்மாண்டமான கட்-அவுட்டுகளும் பேனர்களும் வைக்கப்படுவது வழக்கம். ஆனால், திரையுலகில் தனது அசாத்திய திறமையாலும் அயராத உழைப்பாலும் உச்சம் தொட்டுள்ள நடிகை நயன்தாராவுக்காக 60 அடி உயரத்தில் கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அம்மன் வேடத்தில் அவர் தோன்றும் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த பிரம்மாண்ட கட்-அவுட் குறித்த தகவலும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வைரலாகி வருகின்றன. நயன்தாராவின் ரசிகர்கள் இந்நிகழ்வைக் கொண்டாடி வருவதுடன், திரையரங்குகளில் படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர்.
