திண்டிவனம் அருகே ஐயப்ப பக்தர்கள் வேன் மீது ஆம்னி பேருந்து மோதி 2 பேர் பலி; 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
வேன் விபத்து ஆம்னி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்றிருந்த லாரி மற்றும் சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வேன் மீது ஆம்னி பேருந்து மோதி கவிழ்ந்த கோர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 13 ஐயப்ப பக்தர்கள் மீட்கப்பட்டுத் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வேனும் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்து, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த லாரி மற்றும் ஐயப்ப பக்தர்களின் வேன் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

மோதிய வேகத்தில் ஆம்னி பேருந்தும் நிலைதடுமாறிச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் மற்றும் பேருந்தின் முன்பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேனின் ஓட்டுநர் மற்றும் ஐயப்ப பக்தர் ஒருவர் என மொத்தம் 2 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த 13 ஐயப்ப பக்தர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

விபத்து குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் படையினர், கவிழ்ந்த ஆம்னி பேருந்து மற்றும் சேதமடைந்த வாகனங்களை ராட்சத கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாகச் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதிவேகமா அல்லது ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்துத் திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.