ஆசிய விளையாட்டின் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தும் நீரு தண்டா - தங்கப்பதக்கம் குவித்த வீராங்கனைக்கு கெளரவம்!
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026-ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை நீரு தண்டாவுக்கு மேலும் ஒரு கவுரவம் கிடைத்துள்ளது.ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் பெண்கள் பிரிவு கொடியேந்தியாக நீரு தண்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் அவர் இந்திய அணியை வழிநடத்தி தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
27 வயதான நீரு தண்டா, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். முதலில் மகளிர் தனிநபர் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
தொடர்ந்து, ஆஷிமா அஹ்லாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோருடன் இணைந்து மகளிர் டிராப் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.பின்னர் கினன் செனாயுடன் இணைந்து கலப்பு அணி டிராப் பிரிவில் பங்கேற்ற நீரு தண்டா, இந்தியாவுக்கு மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இதன் மூலம் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவரது பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் அடங்கும்.

இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் இந்தியாவின் பெண்கள் பிரிவு கொடியேந்தியாக நீரு தண்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய துணை அணித் தலைவர் அஞ்சலி பகவத் இதனை உறுதி செய்துள்ளார். ஆண்கள் பிரிவு கொடியேந்தி பின்னர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நீரு தண்டா ஏற்கனவே இந்தியா திரும்பியிருந்த நிலையில், நிறைவு விழாவில் கொடியேந்தும் கவுரவத்துக்காக மீண்டும் ஜப்பான் செல்ல உள்ளார். இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவரது பயணம் பதக்க வெற்றியுடன் மட்டுமின்றி, இந்திய தேசியக் கொடியை ஏந்தும் பெருமையுடனும் நிறைவடைய உள்ளது.
