இனி நீட் தேர்வு ஆன்லைனில்... உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாண பத்திரம்!
தொடர் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு முறையில், தேசிய தேர்வு முகமை பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் நீட் தேர்வு தற்போதைய பேப்பர்-பேனா முறைக்கு பதிலாக, முழுமையாகக் கணினி அடிப்படையிலான ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என உச்ச நீதிமன்றத்தில் என்டிஏ அதிகாரப்பூர்வமாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடு புகார்களை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, என்டிஏ தரப்பில் இந்த முக்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும், என்டிஏ அமைப்பைச் சீரமைக்கவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்ட நிபுணர் குழு, இயற்பியல் ரீதியாக வினாத்தாள்களைக் கையாளுவதில் தான் கசிவுகள் ஏற்படுகின்றன என்று சுட்டிக்காட்டியது. எனவே, தேர்வை உடனடியாக சிபிடி எனப்படும் ஆன்லைன் முறைக்கு மாற்றப் பரிந்துரைத்தது.
இந்த முக்கியப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் விரிவாகக் கலந்தாலோசித்து, வருகிற 2027-ஆம் ஆண்டின் புதிய தேர்வு சுழற்சியில் இருந்து நீட் தேர்வை ஆன்லைன் சிபிடி முறையில் நடத்த முழுமையாகத் தயாராகிவிட்டதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

தற்போது ஜேஇஇ மற்றும் சிசியுஇடி போன்ற தேர்வுகள் ஏற்கனவே கணினி வழியில் நடத்தப்பட்டு வரும் வேளையில், நீட் தேர்வும் இந்த முறைக்கு மாறுவதால் இயற்பியல் ரீதியாக வினாத்தாள்களை அச்சிடுவது, வாகனங்கள் மூலம் நாடு முழுவதும் கொண்டு செல்வது, மற்றும் பாதுகாப்பு அறைகளில் சேமித்து வைப்பது போன்ற எவ்வித நடைமுறைகளும் இனி இருக்காது. தேர்விற்குச் சில நிமிடங்களுக்கு முன்புதான் குறியாக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்கள் நேரடியாகக் கணினிக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பப்படும் என்பதால், பேப்பர் லீக் ஆவதற்கு வாய்ப்பே இல்லை.
இதுவரை ஓஎம்ஆர் ஷீட்களில் ஒருமுறை பேனாவால் வட்டமிட்டுவிட்டால் அதை மாற்ற முடியாது. ஆனால் ஆன்லைன் முறையில், மாணவர்கள் தேர்வு முடியும் வரை தங்களது விடைகளைத் திருத்திக் கொள்ளும் கூடுதல் தாராள வசதி கிடைக்கும்.
நாடு முழுவதும் ஒரே நாளில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முண்டியடிப்பதற்குப் பதிலாக, இனி ஜேஇஇ தேர்வு போலப் பல நாட்களாக, பல்வேறு கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
