நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை.. மத்திய அரசு, சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் மற்றும் முறையற்ற மதிப்பெண் வழங்கீடு உள்ளிட்ட புகார்களைத் தொடர்ந்து, இந்த ஒட்டுமொத்த விவகாரத்தையும் மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பிலிருந்து பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் சிபிஐ ஆகிய தரப்பினருக்கு அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

விசாரணையின் போது, தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் அலட்சியப் போக்கு குறித்து நீதிபதிகள் தங்களின் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தினர். "தொடர்ச்சியாக நாடு முழுவதும் நீட் தேர்வு குறித்து இத்தனை புகார்களும், குளறுபடிகளும் எழுந்து வரும் நிலையிலும், தேசிய தேர்வு முகமை இதிலிருந்து இன்னும் எந்தவொரு பாடமும் கற்கவில்லையா?"
என்று நீதிபதிகள் தங்களின் கடுமையான அதிருப்தியைக் காட்டமாகத் தெரிவித்தனர். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இத்தகைய முறைகேடுகளைத் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஏற்கனவே வினாத்தாள் கசிவு காரணமாக நடப்பு நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான கட்டணத் திருப்புதல் நடவடிக்கைகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை நேரடியாகக் கையில் எடுத்து மத்திய அரசுக்கும் சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசும், சிபிஐ அமைப்பும் நீதிமன்றத்தின் இந்த நோட்டீஸிற்கு அளிக்கப் போகும் விளக்கங்களின் அடிப்படையிலேயே, இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்பதால் ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கித் தற்பொழுது உற்று நோக்கத் தொடங்கியுள்ளது.
