நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. புனே பேராசிரியர் கைது - சிபிஐ விசாரணையில் பரபரப்புத் தகவல்கள்!
தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறேகடுகள் குறித்த வழக்கைச் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் அகமதுநகர் (அஹில்யாநகர்) பகுதியிலிருந்து மேலும் இருவரைக் காவல் துறையினர் கைது செய்து சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை அளித்த புகாரின் பேரில், சிபிஐ அதிகாரிகள் மாநில போலீஸாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புனே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் மனிஷா வாக்மரே என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். வினாத்தாள் கசிவு மற்றும் விநியோகச் சங்கிலியில் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அகமதுநகரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான தனஞ்சய் லோகாந்தே என்பவரும் இந்த மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாசிக் பகுதியில்: முன்னதாக நாசிக் பகுதியைச் சேர்ந்த சுபம் கைர்னார் என்பவரைப் போலீசார் கைது செய்து சிபிஐ வசம் ஒப்படைத்தனர். சிபிஐ விசாரணையின் மூலம் இந்த மோசடி கும்பல் வினாத்தாள்களை எவ்வாறு விநியோகம் செய்தது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன:
கசிந்த நீட் வினாத்தாளின் கடின நகல் முதலில் கையால் எழுதப்பட்டு, பின்னர் அது ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் பிடிஎஃப் கோப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பிடிஎஃப் கோப்புகள் ராஜஸ்தான் மாநிலம் சீகர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சில தனியார் பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர்களிடையே ரகசியமாகப் பகிரப்பட்டுள்ளது.
இந்த "கெஸ் பேப்பர்களை" அணுகுவதற்காக மாணவர்களிடமிருந்தும், பெற்றோரளிடமிருந்தும் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகச் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் இதுவரை ஜெய்ப்பூரைச் சேர்ந்த தினேஷ் பிவால், மங்கிலால் பிவால், விகாஸ் பிவால் மற்றும் குருகிராமைச் சேர்ந்த யாஷ் யாதவ் உள்ளிட்ட 5 முக்கியக் குற்றவாளிகளை டெல்லி நீதிமன்றம் 7 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் யார், தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், முறைகேடாகப் பரிமாறப்பட்ட பணப் புழக்கத்தின் வழியைக் கண்டறியவும் 14-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
