நீட் வினாத்தாள் கசிவு... 10 வருட சிறை தண்டனை விதிக்கும் புதிய திருத்த மசோதா இன்று தாக்கல்!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'நீட்' உள்ளிட்ட பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா-2026' மக்களவையில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்படும் புதிய திருத்த மசோதாவில் உள்ள கடுமையாக்கப்பட்ட சட்டப் பிரிவுகள்:
பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்குக் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், திட்டமிட்டு முறைகேடு செய்யும் கும்பல் அல்லது அமைப்புகளுக்கு ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

தேர்வு முறைகேடு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்' அமைக்கப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணை முடித்துத் தீர்ப்பு வழங்கப்படும். முறைகேடு தொடர்பாகத் தொடங்கப்படும் விசாரணைகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகேர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தி, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முன்மொழிகிறார்.

தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 24 அன்று இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. யு.பி.எஸ்.சி, எஸ்.எஸ்.சி, ரயில்வேத் தேர்வுகள் மற்றும் என்.டி.ஏ நடத்தும் அனைத்துப் பொதுத் தேர்வுகளுக்கும் இந்த வலுவாக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள் முழுமையாகப் பொருந்தும்.
