நீட் மறுதேர்வு.. தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சோகம்!

 
மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

தேசிய அளவில் நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்வு குறித்த பயம் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தமிழகத்தில் மேலும் ஒரு இளம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி கோபிகா. இவர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற இலட்சியத்துடன் நீட் தேர்விற்குத் தீவிரமாகத் தயாராகி வந்துள்ளார். கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற முதன்மை நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நீட் மறுதேர்வை எழுத வேண்டிய சூழல் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வு பயத்தில் சென்னை மாணவி தற்கொலை!

மறுதேர்வுக்கான தேதிகள் நெருங்கி வரும் வேளையில், தேர்வு குறித்த கடுமையான பயமும், "மீண்டும் தேர்வைச் சரியாக எழுத முடியுமோ, முடியாதோ" என்ற மன அழுத்தமும் மாணவி கோபிகாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத மாணவி, இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

மறுதேர்வுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுகளினால் ஏற்படும் மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், தற்கொலைத் தடுப்பு உதவி எண்களைத் தொடர்பு கொண்டு உடனடியாக ஆலோசனைகளைப் பெறலாம். (தமிழக அரசின் உதவி எண்: 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050).