நீட் மறுதேர்வு.. மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!

 
 தலைமை செயலகம்

தமிழகத்தில் நாளை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள சூழலில், தேர்வு மையங்களில் எவ்விதத் தொழில்நுட்பக் குளறுபடிகளோ அல்லது முறைகேடுகளோ இன்றி, தேர்வை மிகச் சீரான முறையில் நடத்தி முடிக்கக் கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடிதம் மூலம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மாணவர்கள் எவ்விதப் பதற்றமுமின்றி தேர்வு எழுதத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 

தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில், தேர்வு நடைபெறும் மையங்களில் தங்குதடையற்ற குடிநீர் வசதி, தகுந்த கழிவறை வசதிகள் மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்கப் போதுமான காற்றோட்ட வசதிகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

தேர்வு நடைபெறும் நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, மின்சார வாரியத்துடன் இணைந்து தேர்வு மையங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தேர்வு மையங்களின் நுழைவாயில்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

தேசியத் தேர்வு முகமையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதைக் கண்காணிக்கத் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவதை உறுதி செய்யவும், ஒட்டுமொத்தத் தேர்வு செயல்முறையையும் அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.