நீட் மறுதேர்வு ஹால் டிக்கெட்... சர்வர் கோளாறால் மாணவர்கள் கடும் அவதி!

 
நீட் நுழைவுத்  தேர்வு நீட் நுழைவுத்  தேர்வு

தேசிய அளவில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதில் திடீரெனப் சர்வர் கோளாறு மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

நீட் மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய ஒரே நேரத்தில் இணையதளத்திற்குள் நுழைந்துள்ளனர்.

 நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

அளவுக்கு அதிகமான நெரிசல் காரணமாகத் தேசிய தேர்வு முகமையின் இணையதளப் பக்கம் முற்றிலும் முடங்கியுள்ளது. பல மாணவர்களுக்கு இணையதளம் திறக்கவே இல்லை என்றும், ஒரு சிலருக்குப் பக்கங்கள் திறந்தாலும் பதிவிறக்கம் செய்யும் போது பாதியிலேயே நின்றுவிடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு நெருங்கி வரும் சூழலில், ஹால் டிக்கெட்டை எடுக்க முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்துப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

அதில், ஒரே நேரத்தில் தளம் பயன்படுத்தப்பட்டதால் சர்வர் ஓவர்லோடு ஆகி இந்தத் தற்காலிகத் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் இந்த சர்வர் கோளாறுகளைச் சரிசெய்யும் பணிகளில் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இந்தச் சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டு ஹால் டிக்கெட் வெளியீடு மிகவும் சீராக நடைபெறும் என்றும் உறுதியளித்துள்ளனர். எனவே, மாணவர்கள் யாரும் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என்றும் NTA கேட்டுக் கொண்டுள்ளது.