நீட் மறுதேர்வுக்கான கால அட்டவணை 10 நாட்களில் வெளியீடு - மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை!

 
நீட் நீட்

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததை ஏற்றுக்கொண்ட முகமையின் இயக்குநர் ஜெனரல் அபிஷேக் சிங், இதற்குத் தாங்களே முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவில் தொடர்புடைய எவராக இருந்தாலும் சி.பி.ஐ. மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வு

ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்குப் பதில், மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும், இந்த மறுதேர்விற்காக மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்  தேர்வு

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காகக் கடந்த 3-ம் தேதி 552 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 5,432 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு முறைகேடு காரணமாக ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மறுதேர்வை விரைந்து நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வுக்கான புதிய தேதிகள் மற்றும் மையங்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.