மே 3ம் தேதி நடந்த தேர்வு ரத்து ... நீட் வினாத்தாள் கசிவு புகார்!

 
நீட் நீட்

நாடு முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட்  தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வை ரத்து செய்வதாகத் தேசிய தேர்வு முகமை  இன்று (மே 12) அதிரடியாக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநில போலீசாரின் சிறப்பு நடவடிக்கைக் குழு  நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேர்வுக்கு முன்னதாகவே சுமார் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய 'கெஸ் பேப்பர்'   சமூக வலைதளங்களில் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு காரணமாகத் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதால், மறுதேர்வு நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், சிகார் மற்றும் ஜெய்ப்பூர் உட்பட   பகுதிகளில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்கு 42 மணி நேரத்திற்கு முன்பே வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இந்த வினாக்கள் பகிரப்பட்டதும், ஒரு வினாத்தாள் 20,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவில் பயிலும் ஒரு மருத்துவ மாணவர் மூலம் இந்த வினாத்தாள் பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.

மத்திய அரசின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்படி, நீட் தேர்வுக்கான மறுதேர்வு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், அவர்களுக்குப் புதிய ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்தத் துரித நடவடிக்கை மாணவர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.