நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்... கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 7 நாட்கள் சிபிஐ காவல்!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 7 நாட்கள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு, வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தக் கடத்தல் மற்றும் சதித் திட்டத்தில் தொடர்புடையதாக ஜெய்ப்பூர், குருகிராம் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுபம் கைர்னார், யஷ் யாதவ், மங்கிலால் பிவால், விகாஸ் பிவால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர் அடங்குவர். ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், இந்த விவகாரத்தில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பதாகக் கருதிய நீதிபதி, குற்றவாளிகளை 7 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் வருகிற 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காக அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவோ கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பான இந்த அதிரடி விசாரணை, கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகளை முறியடிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
