நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிவு? தேசிய தேர்வு முகமை திட்டவட்டமான மறுப்பு!
வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வருகிற ஜூன் 21 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அண்மையில் அறிவித்தது. நாடு முழுவதும் இதற்கான புதிய ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது ஜூன் 21 அன்று நடக்கவிருக்கும் நீட் மறுதேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் சில புதிய வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்த விவகாரம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திய நிலையில், இந்தத் தகவலை தேசிய தேர்வு முகமை முற்றிலும் பொய்யானது என்று கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுந்தகவல் செயலிகளில் பரவி வரும் இத்தகைய தகவல்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் செயல்படும் தேர்வு மோசடி கும்பல்களால் பரப்பப்படுகின்றன என்றும், மாணவர்களின் பதற்றத்தைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதே அவர்களின் நோக்கம் என்றும் முகமை எச்சரித்துள்ளது.
தேர்வு நடைமுறையின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், தேர்வர்கள் யாரும் இதுபோன்ற போலியான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைத்தளக் கணக்குகளைக் கண்டறிந்து, அவை உடனடியாக நீக்கப்படுவதற்காகச் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டு வருவதாகவும், வதந்தி பரப்புவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது.
