நீட் மறுதேர்வு அறிவிப்பு... தேர்வு மைய நகரங்கள் விபரங்கள் வெளியீடு!

 
neet neet

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் மறுதேர்வு குறித்த மிக முக்கிய அறிவிப்பைத் தேசியத் தேர்வுகள் முகமை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 3ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் காரணமாக அந்தத் தேர்வு முறைப்படி ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிவு தொடர்பான தீவிர விசாரணைகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், தகுதியான மாணவர்களுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு மையங்களை அறிந்து கொள்ளும் வசதியாக, தேர்வு மைய நகரங்கள் குறித்த முன் அறிவிப்புச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் இந்த முக்கிய மறுதேர்வினை நடத்தத் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. இந்தத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு எனப்படும் ஹால் டிக்கெட் வெளியிடுவது தொடர்பான கூடுதல் விபரங்களும் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வு வழக்கம்போல மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நேரடியாகக் காகிதம் மற்றும் பேனா முறையிலேயே நடைபெறும் என்று தேசிய தேர்வுமுகமை தெளிவுபடுத்தியுள்ளது. குளறுபடிகள் ஏதுமின்றி இம்முறை தேர்வை மிகவும் பாதுகாப்பாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. வினாத்தாள் கசிவு எதிரொலியாக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில், இந்த மறுதேர்வு அறிவிப்பு மாணவ-மாணவிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.