நீட் மறுதேர்வு பயத்தால் மாணவி தற்கொலை... பெரும் சோகம்!

 
kovai kovai

 

கோவை கோவைப்புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த தொழிற்சங்கப் பிரமுகர் செந்தில்குமாரின் 19 வயது மகள் அனுகீர்த்தனா, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். பிளஸ்-2 முடித்துவிட்டுத் தொடர்ந்து முயற்சித்து வந்த அவர், கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெற்ற நுழைவுத் தேர்வையும் மிகுந்த நம்பிக்கையுடன் எழுதியிருந்தார். ஆனால் வடமாநிலங்களில் நடந்த முறைகேடுகள் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வருகிற 21-ந்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு திடீரென அறிவித்தது.

ஆம்புலன்ஸ்

ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் போதிய மதிப்பெண் கிடைக்காத கவலையில் இருந்த அனுகீர்த்தனா, இந்த திடீர் மறுதேர்வு அறிவிப்பால் கடுமையான மன உளைச்சலுக்கும் பயத்திற்கும் ஆளாகியுள்ளார். மீண்டும் தேர்வை எதிர்கொள்ளப் பயமாக இருப்பதாக உறவினர்களிடம் கூறி வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தனது படுக்கையறைக்குச் சென்றுள்ளார். பின்னர் அதிகாலை 2 மணிக்குத் தனது நெருங்கிய உறவினர்களுக்கு 'நான் வாழ விரும்பவில்லை' என வாட்ஸ்-அப்  வழியாகத் தகவல் அனுப்பிவிட்டுத் தைலத்தைக் குடித்து விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தகவலறிந்து ஓடிவந்த பெற்றோர் பூட்டிய கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி அனுகீர்த்தனா படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த  போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நுழைவுத் தேர்வு பயத்தால் இளம் மாணவி ஒருவர் தனது   உயிரை மாய்த்துக் கொண்ட இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.