மோடி நெகிழ்ச்சி... நீட் தேர்வுக்காக டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!
இளநிலை நீட் மறுதேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளுக்குப் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட எந்தவிதமான அசௌகரியங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு உன்னதமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி கொல்கத்தாவில் இருந்து நேற்றுப் பிற்பகல் 1.15 மணி அளவில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர், உடனடியாகத் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குப் புறப்படாமல் அங்கேயே காத்திருந்தார். நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கவிருந்த நிலையில், விபரீத போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கவே அவர் இந்த முடிவை மேற்கொண்டார்.

பொதுவாகப் பிரதமரின் பாதுகாப்புப் படை வாகன அணிவகுப்பு நகரும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட முக்கியச் சாலைகளில் தற்காலிகமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கமாகும். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது தேர்வு மையங்களைச் சரியான நேரத்திற்குள் அடைவதில் தேவையற்ற காலதாமதம் மற்றும் சிரமங்கள் ஏற்படக்கூடும் எனப் பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகத் தேர்வு எழுதும் மருத்துவக் கனவு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர் சுமார் 45 நிமிடங்கள் விமான நிலைய வளாகத்திலேயே பொறுமையாகக் காத்திருந்தார்.

பின்னர் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பிற்பகல் 2 மணிக்கு நீட் மறுதேர்வு முறைப்படி தொடங்கிய பிறகே, பிரதமர் மோடி தனது இல்லத்திற்குப் பாதுகாப்பு வாகனங்களுடன் விடைபெற்றுச் சென்றார். வினாத்தாள் கசிவு புகார்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நீட் மறுதேர்வை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்
