தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம்.. செந்தில்பாலாஜிக்கும் தொடர்பு - காவல்துறை தகவல்!

 
செந்தில்பாலாஜி

தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ள விபரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ந. இளையராஜாவைத் தொடர்பு கொண்டு, அரசுக்கு எதிராகச் செயல்படக் கோரி ரூ.35 கோடி வரை பேரம் பேசிய வழக்கில் கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நோக்கில், தவெக அரசைப் பலவீனப்படுத்த சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை தருவதாகப் பேரம் பேசப்பட்டுள்ளது.

க்ஃப்

ஏற்கனவே இந்த வழக்கில் யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுடன் சேர்த்து, செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகியோர் கைதாகியுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, இந்த ஒட்டுமொத்தப் பேர விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை விரைவில் கைது செய்யப் போலீசார் திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான சட்டபூர்வ ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் ஒருபுறம் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத் திரும்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த வழக்கிற்குப் புதிய விளக்கங்களை முன்வைத்து வருகின்றன.

க்ட்

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம்  செய்து தவெக அரசு தங்களது பக்கம் இழுத்து வருவதாக அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அண்மையில் கூட அ.தி.மு.க-வைச் சேர்ந்த முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டுத் தவெக-வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கவனத்தைத் திருப்பும் முயற்சி: எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களைத் தவெக வாங்குவதாக எழும் விமர்சனங்களில் இருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது இத்தகைய புதிய புகாரைக் காவல்துறை மூலம் தவெக அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் வாதிட்டு வருகின்றனர்.