“பேச்சுவார்த்தை ஈடுபட்டால் சரணடைந்து விட்டோம் என்று அர்த்தமல்ல...” - அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட குறுகிய கால போர் நிறுத்தம் சற்று நிம்மதியைத் தந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்த 21 மணிநேர அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடுமின்றித் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்கா அறிவித்ததால் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சூழ்ந்து கொண்டுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாடுகளுடன் தாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, எதிரியிடம் சரண் அடைந்துவிட்டோம் என்று பொருள் அல்ல என அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். தங்களது நாட்டின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கவும், தேச நலன்களை உறுதிப்படுத்தவுமே இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் தலைவணங்காது என்று குறிப்பிட்ட அவர், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்குப் பாகிஸ்தான் மூலமாகத் தங்கள் பதிலைத் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இனி வரும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் இந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டிப் போரை நிறுத்துவதிலேயே அதிகக் கவனம் செலுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஈரானின் உரிமைகளில் சமரசம் செய்யாமல், உறுதியான வலிமையுடன் தங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்கப் போவதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
