"ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடரும், ஆனால் போர் நிறுத்தம் இனி இல்லை!" - ட்ரம்ப் பிரகடனம்!

 
ட்ரம்ப்

"ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் அதற்கு அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான இடைக்காலப் போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்பதை ஈரானிடம் எவ்வித சந்தேகமுமின்றித் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.  அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதை அதிபர் டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

போர் நிறுத்தம் நடைமுறையில் இல்லாததால், இரு நாடுகளும் எந்த நேரத்திலும் மீண்டும் நேரடியாக மோதிக்கொள்ளும் விபரீத அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்உச்சகட்டப் பதற்றம் நிலவி வருகிறது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி 40 நாட்கள் நீடித்த போருக்குப் பிறகு, கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே 14 நிபந்தனைகளுடன் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் மெல்லச் சீரடைந்தது.

ஆனால், கடந்த சூலை 7-ஆம் தேதி ஹார்முஸ் நீரிணையில் சென்ற 3 கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர காவல் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் எண்ணெய் உரிமத்தை ரத்து செய்துவிட்டு, சூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் ஈரானின் ரேடார் தளங்கள், அணுமின் நிலையம் அமைந்துள்ள புஷேர் நகரம் மற்றும் முக்கிய ரயில் பாலங்கள் உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட இடங்களில் அசாத்திய வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்த கொடூரத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 78 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் உசேன் கெர்மான்புர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக ஈரானும் பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான இந்த போர் நிறுத்த முறிவு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய தூதரகப் பகுதிகளுக்குப் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இந்த மோதல் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் எரிபொருள் சந்தையில் ஏதேனும் நெருக்கடி ஏற்படுமா என்ற தீவிரக் கண்காணிப்பு நிலவி வருகிறது. புதுடெல்லியில் உள்ள அமெரிக்க மற்றும் ஈரான் தூதரக வளாகங்களைச் சுற்றி சட்டம்-ஒழுங்கு போலீசார் மற்றும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் இணைந்து தற்காலிகச் சோதனைச் சாவடிகளை அமைத்துத் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தூதரகப் பகுதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தேவையற்ற கூட்டங்கள் கூடுவதைத் தவிர்க்கப் போக்குவரத்துப் பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.