ரூ.30000 சம்பள பாக்கி தகராறு: ஒப்பந்ததாரரின் காரை திருடிய தொழிலாளி !
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் மேற்கூரைத் தகடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நந்து என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டார். அவரிடம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப் (39) என்பவர் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

அனுப் சரிவர வேலை செய்யாததால், அவருக்கு வழங்க வேண்டிய ரூ.30 ஆயிரம் சம்பளப் பணம் நிலுவையில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனுப், ஒப்பந்ததாரர் நந்துவின் காரைத் திருடிச் சென்றதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து நந்து அளித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுப்பைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு அனுப் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து காரைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சம்பளப் பாக்கி தொடர்பான விவகாரத்தில் கார் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
