நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த உதவி ஆணையாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சியின் கணக்குப் பிரிவில் உதவி ஆணையாளராகப் பணியாற்றி வந்தவர் பாலசுந்தரம் (51). தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், தினமும் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வந்து பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்துக்கு வந்த அவர், இரண்டாவது மாடியில் உள்ள தனது அறையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பலனில்லை
அப்போது பாலசுந்தரம் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மாநகராட்சி ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாநகராட்சி அலுவலகத்திலேயே உதவி ஆணையாளர் உயிரிழந்த சம்பவம் ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
