வீட்டின் முன்பு பிரபல ரவுடி வெட்டிக்கொலை; நெல்லையில் பரபரப்பு!
நெல்லை பாளையங்கோட்டையில் வீட்டின் முன்பு நின்றிருந்த பிரபல ரவுடியை, அவரது நண்பர்கள் இருவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த டேவிட் ராஜின் மகன் சாலமன் சாம் பிரபாகர் (34). இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது மூன்று கொலை வழக்குகள், இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் முன்பு சாலமன் சாம் பிரபாகர் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அவரது நண்பர்கள் இருவர் அவருடன் பேசினர். பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட தகராறில், இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சாலமன் சாம் பிரபாகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
