இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுக்கடை! காலையில் திரண்ட கிராம மக்கள்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் காடன்குளம் பகுதியில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே மதுபானக் கடை மற்றும் பார் திறக்கப்பட்டதாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.காடன்குளம் பகுதியில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே புதிதாக மதுபானக் கடை மற்றும் பார் அமைக்கப்பட்டதாகவும், நேற்று இரவு திடீரென மதுபான விற்பனை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
அந்த பகுதியில் மதுபானக் கடை திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்த கிராம மக்கள், கடை திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அங்கு திரண்டனர். பின்னர் மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சுமார் 3 மணி நேரம் போராட்டம் நீடித்த நிலையில், மதுபானக் கடை திறக்கப்படாது என போலீசார் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் நெல்லை மாவட்டத்தின் முக்கியமான பறவைகள் வாழிடங்களில் ஒன்றாக இருப்பதால், அதன் அருகே மதுபானக் கடை மற்றும் பார் அமைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், கடை திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அனுமதிகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விளக்கம் வெளியாகும்பட்சத்தில் அடுத்தகட்ட தகவல்கள் தெரியவரும்.
