தோட்டப் பகுதியில் பெண் கரடி உயிரிழப்பு... நெல்லையில் வனத்துறையினர் தீவிர விசாரணை!

 
கரடி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் வடமலைசமுத்திரம் கிராமம், இந்தியன் பெட்ரோல் நிலையம் பின்புறம் அமைந்துள்ள செய்யது சுலைமான் என்பவரின் தோட்டப்பகுதியில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி நேற்று மாலை 5 மணியளவில் திடீரென இறந்து கிடந்தது. வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்திற்குள் கரடி இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்தச் செய்தி அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து ஏராளமான கிராம மக்கள் அங்கு வந்து பார்வையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கரடி

இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட வனத்துறை துணை இயக்குனர் மற்றும் வன கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, அரசு விதிமுறைகளின்படி கரடியின் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர். கரடி இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகள் களத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

கரடி

உடற்கூறு ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள் முழுமையாகக் கிடைத்த பின்னரே கரடியின் உயிரிழப்பிற்கான காரணம் உறுதி செய்யப்படும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியை விட்டு வெளியேறித் தோட்டப் பகுதிக்கு வந்த கரடிக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.