5 மணி நேரம் தேனீக்களால் முகத்தை மூடி நெல்லை இளைஞர் உலக சாதனை !
நெல்லையைச் சேர்ந்த வேளாண் படிப்பு முடித்த இளைஞர் இசக்கிமுத்து என்ற முருகன், தேனீக்கள் மனித குலத்திற்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்த வினோதமான சாதனை முயற்சியில் இறங்கினார். நெல்லை மாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பொதுமக்கள் முன்னிலையில் தனது முகம் மற்றும் தலைப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை மொய்க்கவிட்டார்.
கண்கள், மூக்கு, வாய் என முகம் தெரியாத அளவுக்கு தேனீக்கள் அவரது முகத்தை முழுமையாக மூடி ஆக்கிரமித்தன. 5 மணி நேரம் தேனீக்கள் கடித்தால் கடுமையான வலி மற்றும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழலிலும், எதற்கும் அஞ்சாமல் துளியும் பதற்றமின்றி சிலை போல அசையாமல் அவர் அமர்ந்திருந்தார். தொடர்ந்து 5 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை தேனீக்களை முகத்திலேயே அமரவைத்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் புதிய சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒருவர் படைத்திருந்த சாதனையை இதன் மூலம் முருகன் வெற்றிகரமாக முறியடித்துள்ளார். மாற்று பணிகளை தேடி செல்லாமல் முழுநேரமாகத் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், 18-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட தேன் பொருட்களை தயாரித்து வருகிறார். மேலும், பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சிகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
