காஷ்மீரை பாகிஸ்தானுடன் சேர்த்த நேபாள ஏர்லைன்ஸ்... சமூக வலைதளங்களில் வலுக்கும் எதிர்ப்பு!

 
kashmir kashmir

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் அரசுக்குச் சொந்தமான நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தியாவிற்குச் சொந்தமான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகக் காட்டி அந்த நிறுவனம் புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் நெருக்கமான நாடாக நேபாளம் அறியப்பட்டாலும் சமீபகாலமாக இந்தியப் பகுதிகளைச் சீண்டும் வகையில் இதுபோன்ற வரைபடங்களை அந்நாட்டு அரசு நிறுவனங்கள் வெளியிட்டு வருவது இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள ஏர்லைன்ஸ் வெளியிட்ட இந்த தவறான வரைபடம் சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். கடந்த ஆண்டு நேபாளம் வெளியிட்ட புதிய பணத்தாளிலும் இந்தியாவின் கலாபானி மற்றும் லிபுலேக் போன்ற பகுதிகள் நேபாள எல்லைக்குள் காட்டப்பட்டிருந்தது ஏற்கனவே சர்ச்சையாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து அந்தத் தவறான வரைபடத்தை உடனடியாக நீக்கியுள்ளது. மேலும் தவறுதலாக இந்த வரைபடம் பதிவிடப்பட்டதாகவும் இதற்காக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 1751 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேபாளத்தின் இத்தகைய செயல்பாடுகள் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.