பிரியகோல்டு பிஸ்கட்டுக்கு நேபாளத்தில் தடை! மாட்டுத் தீவனத் தவிடு பயன்படுத்தியதாகப் புகார்

 
பிரியாகோல்டு

 

இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘Priyagold’ பிஸ்கட்டுகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூர்யா ஃபுட் அண்ட் அக்ரோ நிறுவனம் தயாரிக்கும் இந்த பிஸ்கட்டுகளின் இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI நடத்திய ஆய்வில், பிஸ்கட் தயாரிப்பில் மனிதர்கள் உட்கொள்வதற்கானதல்ல எனக் குறிப்பிடப்பட்ட மாட்டுத் தீவனத் தவிடு பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மேலும், தொழிற்சாலையில் சுகாதாரம், பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களைச் சேமிப்பதில் குறைபாடுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் உணவு உரிமம் இடைநிறுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

பொது சுகாதாரம் மற்றும் நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு, சந்தையில் உள்ள பிஸ்கட் இருப்புகளைத் திரும்பப் பெறவும் நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை தொடங்கியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகவில்லை