நேபாள வெள்ளத்தில் சடலங்களிடம் நகையை திருடும் கொடூரம்...அதிர்ச்சி வீடியோ !

 
நேபாளம்

 

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் காதணிகளைத் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான 41 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை 469 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எத்தனையோ பேர் ஆதரவுக்கரம் நீட்டி வரும் நிலையில், உள்ளூரில் சிலர் சடலங்களில் இருந்து நகைகளைத் திருடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் உடல் நாராயணி ஆற்றில் கிடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற 2 பேர் மரப்பலகை மற்றும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து உடலைத் கரைக்கு இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணின் இரு காதுகளிலும் இருந்த காதணிகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் காட்சி அங்குள்ளவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து நேபாளப் போலீசார் உடனடியாகச் செயல்பட்டுச் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் 25 வயதான மதன் குருங் மற்றும் 38 வயதான உமேஷ் சவுத்ரி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுப் பிடிக்கப்பட்டுள்ளனர். சிட்வான் போலீசார் பாரத்பூர் மாநகராட்சியின் போக்ரா பேருந்து நிலையம் அருகே இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளம் மற்றும் பேரிடர் சூழலில் பாதிக்கப்பட்டவர்களிடம் கொள்ளையடிப்பது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.