நேபாள் வெள்ளப்பெருக்கு: கோவையில் பக்தர்கள் 8 பேர்; ஈஷா பக்தர்கள் 80 பேர் குறித்த தகவல் கிடைக்காமல் உறவினர்கள் தவிப்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 8 பேர் மற்றும் ஈஷா யோகா மையம் மூலம் சென்ற 80 பேர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 700-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மேலும் 2,500-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி ராணுவத்தினரால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 300 பேரில் இதுவரை 250 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியோரை மீட்கும் பணியில் தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

கயிலாய யாத்திரை மற்றும் சுற்றுலா சென்றவர்களில், வடவள்ளி, சாய்பாபாகாலனி, நஞ்சுண்டாபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோவையைச் சேர்ந்த 8 பேர் குறித்தும், ஈஷா யோகா மையம் மூலம் சென்ற 80 பேர் குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 5 நாட்களுக்கு மேலாகத் தொடர்பு கொள்ள முடியாததால் அதிர்ச்சியடைந்துள்ள மாயமானவர்களின் உறவினர்கள், டெல்லியில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுவதற்காகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
