நேபாளப் பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 389 ஆக உயர்வு; 977 பேர் மாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்!
நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாகவும், 977 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களில் 28 நேபாள காவல்துறையினர், 45 ராணுவத்தினர், 13 ஆயுதப் படையினர், 15 சுங்க மற்றும் 4 குடியுரிமை அலுவலக அதிகாரிகள் அடங்குவர். மேலும், காணாமல் போனவர்களில் 517 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மீட்புப் பணிகளில் 13,295 பாதுகாப்புப் படையினரும், நேபாள ராணுவத்தின் 6 ஹெலிகாப்டர்கள் உள்பட மொத்தம் 15 ஹெலிகாப்டர்களும் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் உள்பட 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் 400-க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும், இவர்களில் 133 பேர் இந்தியர்கள் மற்றும் 37 பேர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 14 மாதங்களில் லெண்டே கோலா ஆற்றில் 2 வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை நேபாளப் பகுதியில் பனிப்பாறை உடைந்து பனிச்சரிவு ஏற்பட்டதே இந்த திடீர் பெருவெள்ளத்திற்குக் காரணம் என நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை உதவி மையங்கள்: இந்தியாவில் இருந்து: 1800 309 3793 / வெளிநாடுகளில் இருந்து (மிஸ்டு கால் மூலம்): +91 80 6900 9900 / குறுந்தகவல் உதவிக்கு: +91 80 6900 9901 / வாட்ஸ்அப் எண்: 9289516712 இந்திய தூதரகம் (நேபாளம்): அவசரக்கால எண்கள்: +977 985 131 6807, +977 970 910 7500
