நேபாளப் பெருவெள்ளம்.. சீனப் பகுதிக்குள் தப்பியோடிய தமிழர்கள் கதி என்ன? டிராவல்ஸ் உரிமையாளர் அதிர்ச்சி பேட்டி!
நேபாளம் வழியாகச் சீன எல்லையில் உள்ள கைலாஷ் யாத்திரைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 'மகாதேவ் கைலாஷ் யாத்ரா' என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனம் மூலம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து 49 பேர் கொண்ட குழுவினர் கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். சுமார் 14 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப வேண்டிய நிலையில், நேபாள-சீன எல்லைப் பகுதியில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் நடைமுறைகளை மேற்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் அந்த அலுவலகக் கட்டடமே அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா நிறுவன உரிமையாளர் மறவேள், குடியேற்ற அலுவலகத்தின் வெள்ள பாதிப்பு சிசிடிவி காட்சிகளில் நீல நிற உடையில் தப்பி ஓடியவர்கள் தங்களது குழுவைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரிவித்தார்.

மலை மேல் ஓடிய ஒருசிலர் தப்பியிருக்கலாம் என்றும், அவர்கள் சீனப் பகுதிக்குள் ஓடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பகுதி முழுவதும் ஆறு அடி உயரச் சேற்றால் மூடப்பட்டுள்ளதாகவும், தங்களது மூன்று குழுக்களும் இதில் சிக்கியுள்ளதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், நேபாள அரசின் தகவல் மட்டுமே கிடைத்து வரும் நிலையில், சீன அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
