செடி, கொடிகளை பிடித்து உயிர் தப்பினோம்... நேபாள வெள்ளத்தில் தப்பிய 21 தமிழர்கள் சென்னை வருகை கண்ணீர் கதறல்!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் கடந்த இருபத்தாறாம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பனிப்பாறைகளின் சரிவினால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயிலாய மலைக்கு ஆன்மிக யாத்திரை சென்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி நேபாள நாட்டின் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய மற்றும் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் முதல்கட்டமாகச் சென்னை, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் இருபத்தோர் யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர். காத்மாண்டு நகரிலிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து பின்னர் சென்னை வந்தடைந்த அவர்களை அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் நேரில் வரவேற்றனர்.
பின்னர் அனைவரும் அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலமாக அவரவர்களின் சொந்த ஊர்களுக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, நிலச்சரிவின் போது செங்குத்தான மலையில் செடி கொடிகளைப் பிடித்து ஏறியும், புடவைக் கயிற்றைப் பற்றியும் தாங்கள் உயிர் தப்பிய அனுபவத்தை மீட்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் சத்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
