இந்திய விமானிக்கு இஸ்ரேலின் உயரிய கவுரவம்! மோடியுடன் வருமாறு நெதன்யாகு அழைப்பு

 
நெதன்யாகு

 

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் துணை விமானியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க உதவிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் சிறப்பு தீபம் ஏற்ற வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி 174 பயணிகளுடன் பிளைதுபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் துணை விமானி, கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலில் படுகாயமடைந்த ஸ்மித் மச்சார், விமானம் ஆபத்தான நிலையில் கீழ்நோக்கி சென்றபோதும் துணிச்சலுடன் செயல்பட்டார். அவர் காக்பிட் கதவை திறக்க முடிந்ததைத் தொடர்ந்து, வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்திய துணை விமானியை கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு ஸ்மித் மச்சாருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் அவருடன் வீடியோ அழைப்பில் பேசி, அவரது துணிச்சலை பாராட்டியிருந்தார்.இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஸ்மித் மச்சாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியா, இஸ்ரேல் மற்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் அவர் உண்மையான ஹீரோ என்று நெதன்யாகு பாராட்டினார்.

Smit Machchhar: Benjamin Netanyahu calls Indian pilot hero, invites to Israel

மேலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியுடன் இணைந்து ஸ்மித் மச்சார் சிறப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று நெதன்யாகு அழைப்பு விடுத்தார். இது இஸ்ரேல் சுதந்திர தினத்தில் வழங்கப்படும் மிக உயரிய கவுரவங்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கமாக இந்த கவுரவம் இஸ்ரேல் குடிமக்களுக்கு வழங்கப்படும் நிலையில், ஸ்மித் மச்சாரின் துணிச்சலை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு ஏராளமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு கிடைத்துள்ள இந்த கவுரவம், இந்திய விமானத்துறையிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.