இன்று முதல் டெல்லி - மெல்போர்ன் ஏர் இந்தியாவின் புதிய சொகுசு விமானச் சேவை தொடங்கியது!

 
ஏர் இந்தியா

சர்வதேச வான்வழிப் போக்குவரத்துத் துறையில் இந்தியப் பயணிகளுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும் வகையிலான ஒரு புதிய சொகுசு விமானச் சேவை அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தலை நகரான புதுடெல்லியிலிருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன்  நகரத்திற்குச் செல்லும் சர்வதேசப் பயணிகளின் வசதிக்காக, மேம்படுத்தப்பட்ட அதிநவீனப் புதிய சொகுசு விமானச் சேவை இன்று  முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம், இந்த நீண்ட தூரப் பயண வழித்தடத்திற்காகப் பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்ட Boeing 777-300ER ரக சொகுசு விமானங்களை இன்று முதல் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. இதில் சர்வதேசப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு பிரீமியம் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா விமானம்

நீண்ட தூர வான்வழிப் பயணத்தை மிகவும் எளிமையாக்கும் வகையில், இந்த விமானங்களில் அதிநவீன 'முதல் வகுப்பு' மற்றும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்ட 'மேம்படுத்தப்பட்ட வணிக வகுப்பு' இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் வான்வழியாகப் பயணிக்கும் போதே தங்களது அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும், தொடர்பில் இருக்கவும் ஏதுவாகப் பயணத்தின்போது பயன்படுத்தக்கூடிய அதிவேக 'வை-பை' இணைய வசதி மற்றும் உலகின் முன்னணிச் சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்படும் சர்வதேசத் தரத்திலான உயர்தர உணவுகள் உள்ளிட்ட பிரீமியம் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, டெல்லி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு 4 முறை மட்டுமே இந்த புதிய சொகுசு விமானச் சேவை இயக்கப்படவுள்ளது.

ஏர் இந்தியா விமானம்

எனினும், ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் இத்திட்டத்திற்கு எழுந்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தச் சேவையானது வாரத்தின் அனைத்து நாட்களும் இயங்கும் 'தினசரி விமானச் சேவையாக' தரம் உயர்த்தப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.