கீழடி மரபணு ஆய்வில் புதிய தகவல்... பண்டைய தமிழர்கள் உணவில் அதிகளவு இறைச்சி பயன்பாடு!
கீழடி அகழாய்வுத் தளத்தின் கொந்தகைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணுத்துறை மேற்கொண்ட ஆய்வில், பண்டைய தமிழர்கள் அதிகளவில் இறைச்சியை உணவாகக் உட்கொண்டது தெரியவந்துள்ளது.
முதுமக்கள் தாழிகளின் பக்கச்சுவர்களில் அதிகளவில் கொழுப்புப் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழடி மக்கள் இறைச்சியை முதன்மை உணவாக அதிகளவில் உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தானியங்கள் மற்றும் பால்: இறைச்சி மட்டுமன்றி பால், தினை, அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றையும் அவர்கள் அன்றாட உணவில் பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர்.

தாழிகளில் இருந்த எலும்புத் திசுக்கள், கொழுப்புப் படிமங்கள் மற்றும் பற்களில் படிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்து சுமார் 75,000 மரபணு குறியீடுகள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கொந்தகையில் கி.மு. 600, ஆதிச்சநல்லூரில் கி.மு. 1,000 மற்றும் சிவகளையில் கி.மு. 3,300 ஆகிய காலக்கட்டங்களைச் சேர்ந்த மனித எச்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பண்டைய தமிழர்களின் மரபணு அமைப்பு, தற்போதைய தமிழக மக்கள், இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களின் மரபணு அமைப்போடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.
தற்போது கீழடி மக்கள் வளர்த்த கால்நடைகள் மற்றும் அவற்றின் இடம்பெயர்வு குறித்த தொடர் ஆய்வுகளையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மரபணுத்துறை நடத்தி வருகிறது.
