தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிகள் தளர்வு - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில், தகுதிகள் மற்றும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு அரசு கூடுதல் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யால் தொடங்கி வைக்கப்பட்டு இந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப விதிமுறைகளின்படி, பிரசவித்த தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இருப்பினும், திருமணமாகி வெளிமாநிலங்களில் வசித்து வந்தாலும், பிரசவத்திற்காகத் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அரசு விதிகளில் தளர்வு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் மற்றும் தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தால் அந்தப் பிள்ளைக்கும் இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவர் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்தாலும், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த நிலையில், புதிய விதியின் கீழ் அவரது குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின் திருத்தம் கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
