ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிமுறைகள் - 8 நகரங்களில் வசிப்போருக்குச் சலுகை!

 
ஏப்ரல் 1 வருமான வரி ஏப்ரல் 1 வருமான வரி

சுமார் 65 ஆண்டுகளுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக எளிமைப்படுத்தப்பட்ட புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், நடைமுறைகள் பெருமளவு மாற்றப்பட்டுள்ளன.

சட்டத்தின் முக்கிய மாற்றங்கள்:

பழைய சட்டத்தில் இருந்த சிக்கலான வார்த்தைகள் நீக்கப்பட்டு, சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது. பிரிவுகள் 819-லிருந்து 536 ஆகக் குறைப்பு. அத்தியாயங்கள்: 47-லிருந்து 23 ஆகக் குறைப்பு. வார்த்தைகள்: 5.12 லட்சத்திலிருந்து 2.60 லட்சமாகக் குறைப்பு.

வருமான வரி

வீட்டு வாடகைப்படி (HRA) சலுகை விரிவுபடுத்தல்:

இதுவரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய 4 பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அடிப்படைச் சம்பளத்தில் 50% வரை HRA வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மற்ற நகரங்களுக்கு 40% மட்டுமே இருந்தது. புதிய விதியின்படி இப்போது சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தாவுடன் ஐதராபாத், புனே, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 8 நகரங்களில் வசிக்கும் மாதச் சம்பள ஊழியர்கள் இனி 50% வரை HRA வரிவிலக்கு பெறலாம்.

வரிக்கழிவு பெற வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையிலான உறவைத் தெரிவிப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூலதன ஆதாயம் மற்றும் பங்குச்சந்தை: 

மூலதன ஆதாயம், பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான வரி விதிப்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வருமானத்திற்கு வரிச் சலுகை கோருபவர்களுக்கு, அந்தத் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் பொறுப்பு பட்டயக் கணக்காளர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கு செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிப்பு!

பட்டயக் கணக்காளர்களின் (CA) பொறுப்பு அதிகரிப்பு:

புதிய விதிகளின்படி, தணிக்கை செய்யும் போது தவறான தகவல்கள் அல்லது வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால், அதற்குச் சம்பந்தப்பட்ட பட்டயக் கணக்காளர்களும் நிறுவனங்களுமே பொறுப்பேற்க வேண்டும். பான் நகல்கள் மற்றும் தணிக்கைக் கண்காணிப்புகளைத் தீவிரமாகச் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு 'புதிய வருமான வரி விதிமுறைகள் - 2026' என்று பெயரிடப்பட்டுள்ளது. பழைய சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நடைமுறைகள் புதிய சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.