முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி வங்கதேசத்துக்கு புதிய இந்திய தூதராக நியமனம்?
வங்காளதேசத்திற்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த பிரணய் வர்மா, சமீபத்தில் பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதராக மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வங்காளதேசத்திற்கான இந்தியாவின் புதிய தூதராக முன்னாள் மத்திய மந்திரி தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 75 வயதான இவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரயில்வே மந்திரி மற்றும் சுகாதாரத்துறை இணை மந்திரி என முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர் ஆவார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினராகப் பணியாற்றிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அண்டை நாடான வங்காளதேசத்துடன் இந்தியா கொண்டுள்ள உறவுகளில் சில சிக்கல்கள் நிலவி வரும் வேளையில், அங்கு அமைந்துள்ள புதிய அரசுடன் சுமுகமான உறவை மீண்டும் ஏற்படுத்த இவரது அனுபவம் பெரிதும் உதவும் என மத்திய அரசு கருதுகிறது.

இந்த முக்கிய நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மத்திய அரசு இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. வங்காளதேசத்தின் தற்போதைய அரசியல் சூழலில், இந்தியாவுடனான உறவுகளைப் புதுப்பிக்க விரும்புவதால், அந்த நாட்டுடனான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள தினேஷ் திரிவேதி சரியான தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
