6 வயது மகனை ட்ரெட்மில்லில் ஓடவைத்து உயிரிழக்கச் செய்த தந்தை! 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

 
america

 

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனக் கூறி தனது 6 வயது மகனை ட்ரெட்மில்லில் ஓடவைத்து துன்புறுத்திய தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் கிரிகோர் (Christopher Gregor) என்பவர், தனது மகன் கோரி மைசியோலோவை (Corey Micciolo) உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த ட்ரெட்மில்லில் ஓடவைத்துள்ளார். சிறுவன் அதிக உடல் எடையுடன் இருப்பதாகக் கூறி இயந்திரத்தின் வேகத்தை அதிகரித்ததாகவும், அவன் பலமுறை தடுமாறி கீழே விழுந்தபோதும் தொடர்ந்து ஓடச் செய்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வழக்கில் முக்கிய ஆதாரமாகின.2021 ஏப்ரல் 2-ம் தேதி சிறுவன் உயிரிழந்தான். உடற்கூராய்வில் ஏற்பட்ட காயங்களே மரணத்துக்குக் காரணம் எனத் தெரியவந்தது.

2024 மே மாதம் நடைபெற்ற விசாரணையின் முடிவில், கிரிகோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், தீவிரமான கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்திய குற்றம் மற்றும் குழந்தையின் நலனுக்கு ஆபத்து விளைவித்த குற்றங்களில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2024 ஆகஸ்ட் 2-ம் தேதி நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் எனத் தொடர்ந்து அனுபவிக்கும் வகையில் மொத்தம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனையில் குறைந்தது 85 சதவீதத்தை அவர் சிறையில் கழிக்க வேண்டும்.