வீட்டு வாசலில் 4 அடி வெள்ளம்... அதில் நீந்திய சுறா! அமெரிக்காவில் வைரலான அதிர்ச்சி வீடியோ!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளை கடந்த செப்டம்பர் 26-ம் தேதி சக்திவாய்ந்த ‘நார்ஈஸ்டர்’ புயல் தாக்கியது. கனமழை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக நியூ ஜெர்சியின் கடலோரப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக நியூ ஜெர்சியில் உள்ள சர்ப் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு வெள்ளநீர் சூழ்ந்தது. இந்த நிலையில், சர்ப் சிட்டியில் நடந்த வினோதமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
சர்ப் சிட்டியில் வசிக்கும் ட்ரூ ப்ரோகாசினோ, தனது வீட்டின் அருகே வெள்ளநீரில் ஏதோ ஒரு உயிரினம் நீந்திச் செல்வதை கவனித்துள்ளார். முதலில் அது மீனாக இருக்கலாம் என்று நினைத்த நிலையில், பின்னர் அது சுறா என்பது தெரியவந்தது.
சுமார் 4 அடி உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்திருந்த நிலையில், அந்த சுறா வீட்டின் வாசல் வழியாக நீந்திச் சென்ற காட்சியை ட்ரூ ப்ரோகாசினோ வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவில் சுறாவின் முதுகுத் துடுப்பு வெள்ளநீருக்கு மேலே தெரியும் வகையில் அது குடியிருப்பு பகுதிக்குள் நீந்திச் செல்வது பதிவாகியுள்ளது.
பின்னர் அந்த உயிரினம் மீண்டும் Barnegat Bay பகுதியை நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவை ஆய்வு செய்த கடல்வாழ் உயிரியல் நிபுணர் கிரெக் ஸ்கோமல், அது ‘Smooth Dogfish’ எனப்படும் சிறிய வகை சுறா என அடையாளம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை சுறாக்கள் நியூ ஜெர்சி கடலோரப் பகுதிகளில் பொதுவாக காணப்படுகின்றன.
நார்ஈஸ்டர் புயலால் ஏற்பட்ட கடும் கடலோர வெள்ளம் காரணமாக கடல் மற்றும் வளைகுடா பகுதிகளில் இருந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த நிலையில், அதனுடன் இந்த சுறாவும் வெள்ளநீரில் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளத்தில் சுறா நீந்திச் செல்லும் இந்த வினோத காட்சி தற்போது இணையத்தில் வேகமாக கவனம் பெற்று வருகிறது.
