அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் புதிய கட்டுப்பாடு - இந்தியர்களுக்கு பாதிப்பு!

 
அமெரிக்கா பாஸ்போர்ட் குழந்தை குடியுரிமை

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் தீவிரத் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய விதிகளின்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்குப் பாஸ்போர்ட் பெறப் பெற்றோர் தங்களது உறவை நிரூபித்துப் புகைப்பட அடையாள அட்டையைச் சமர்ப்பித்தாலே போதுமானது. ஆனால், புதிய திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்களது அமெரிக்கக் குடியுரிமைக்கான ஆதார ஆவணங்களையும் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குடியேற்றம் மற்றும் விசா விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், தற்போது பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது சட்டத்திருத்தத்தின்படி, அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெறுவது அடிப்படை உரிமையாக உள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.