வாட்ஸ்அப்பில் புது அப்டேட்... இனி மெசேஜ் அனுப்புவதை14 நாட்கள் வரை முன்கூட்டியே திட்டமிடலாம்!
பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ‘Scheduled Messages’ எனும் நேரம் குறிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரை முன்கூட்டியே நேரத்தைத் தேர்வு செய்து, தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகளில் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பத் திட்டமிட முடியும். பயனரின் கைபேசி அணைக்கப்பட்டிருந்தாலும் கூட, திட்டமிடப்பட்ட சரியான நேரத்தில் செய்திகள் சென்றடையும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் டெக்ஸ்ட் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு முன்கூட்டியே தேதியையும் நேரத்தையும் நிர்ணயிக்க முடியும். தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் என இரண்டிலும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரையிலான கால இடைவெளியில் செய்திகளை அனுப்ப நேரத்தைக் குறிக்க முடியும். பிறந்தநாள் வாழ்த்துகள், நினைவூட்டல்கள் மற்றும் முக்கியத் தகவல்களை மறக்காமல் சரியான நேரத்தில் அனுப்ப இது பயனுள்ளதாக இருக்கும்.
திட்டமிடப்பட்ட செய்திகள் பயனரின் கைபேசி வழியாக மட்டுமின்றிச் சேவையகத்தின் துணை கொண்டு திட்டமிடப்பட்ட நேரத்தில் அனுப்பப்படுவதால், பயனரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலோ கூட, குறிப்பிட்ட நேரத்தில் செய்திகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மின்னஞ்சல் மற்றும் பிற சமூக வலைதளங்களில் உள்ள செய்தி திட்டமிடல் வசதி, தற்போது வாட்ஸ்அப்பிலும் இணைந்திருப்பது அன்றாடத் தகவல் தொடர்பை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
