சென்னை - தூத்துக்குடி இடையே புதிய வந்தே பாரத் ரயில்... தெற்கு ரயில்வே பரிந்துரை!

 
தூத்துக்குடி வந்தே பாரத் ரயில்

தூத்துக்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 'முத்துநகர் எக்ஸ்பிரஸ்' மட்டுமே பிரதான ரயிலாக உள்ளது. தூத்துக்குடி ஒரு முக்கியமான தொழில் நகரமாகவும், திருச்செந்தூர் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்கள் நிறைந்த மாவட்டமாகவும் இருப்பதால், கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.

சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மதுரை வழியாகத் தூத்துக்குடிக்கு இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்டால், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சுமார் 8 முதல் 9 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி வசதி, சொகுசு இருக்கைகள், பயோ டாய்லெட் மற்றும் தானியங்கி கதவுகள் போன்ற நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம்பெறும்.

வந்தே பாரத்

ஏற்கனவே கடந்த மாதம் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது சென்னை - தூத்துக்குடி வந்தே பாரத் ரயில், தஞ்சை - மைசூர் வந்தே பாரத் ரயில் ஆகிய இரண்டு புதிய ரயில்களை இயக்கத் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

ரயில்வே வாரியம் இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால், விரைவில் வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் ஏற்கனவே சென்னை - நெல்லை, சென்னை - நாகர்கோவில் உள்ளிட்ட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்பு தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.