திரைப்படத் தொழிலாளர்களுக்குப் புதிய ஊதிய முறையை.. தயாரிப்பாளர்கள் சங்கம் - பெப்சி கூட்டமைப்பு அறிவிப்பு - 3 பிரிவுகளாக பட்ஜெட்!

 
தயாரிப்பாளர்கள் பெப்சி

தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைக்கவும், அதே நேரத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் ஏதுவாக, புதிய ஊதிய முறை மற்றும் பட்ஜெட் வகைப்பாடு திட்டத்திற்குத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சி அமைப்பும் கைகோர்த்துப் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் சென்னை அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்றது.

தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், பெப்சி சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 பல்வேறு கலை மற்றும் தொழில்நுட்ப சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இம்மாபெரும் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத்தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர்கள் எஸ். கதிரேசன், ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் என். சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி. சிவா, பொருளாளர் தனஞ்செயன், செயற்குழு உறுப்பினர்கள், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு உள்ளிட்ட திரையுலகின் முக்கிய தூண்கள் பலரும் இதில் ஆஜராகி தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

இக்கூட்டத்தின் முடிவில், தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் பாதிக்கப்படாத வண்ணம், இந்தியத் திரையுலகிலேயே முதன்முறையாகப் புதிய ஊதிய வகைப்பாடு முறை ஒன்றை நடைமுறைப்படுத்த ஒருமனதாகத் திட்டமிட்டுள்ளனர்.

இனிமேல் எடுக்கப்படும் திரைப்படங்கள் அவற்றின் முதலீட்டின் அடிப்படையில் சிறிய பட்ஜெட், மத்திம பட்ஜெட், மற்றும் பெரிய பட்ஜெட் என மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.

இந்த மூன்று பட்ஜெட் பிரிவுகளுக்கு ஏற்ப, அந்தந்த திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான தினசரி மற்றும் ஒப்பந்த சம்பளங்கள் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் சிறிய படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஊதியச் சுமை பெருமளவு குறைந்து, சுலபமாகப் படங்களை எடுத்து முடிக்க முடியும். அதே நேரத்தில் பெரிய படங்களின் பிரம்மாண்டத்திற்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உரியப் பங்கும் தடையின்றிப் போய் சேரும்.

தயாரிப்பாளர்களின் நிதி நிலைமையையும், தொழிலாளர்களின் உழைப்பையும் ஒரே தராசில் வைத்துச் சீர்தூக்கிப் பார்க்க உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ஊதியக் கொள்கை, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிற்கே ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் முன்னோடித் திட்டமாகவும் அமையும் எனத் திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.