அரசு ஊழியர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு... புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணை !

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

தமிழகத்தில் பணிபுரியும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மாநில நிதித்துறை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய அரசாணையை முறைப்படி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்காகப் புதிதாக வடிவமைக்கப்பட்ட 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' 2026 ஜனவரி 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முறைப்படி நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தகுதியான அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 50 சதவீதத் தொகை உறுதிப்படுத்தப்பட்ட மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படவுள்ளது. இதற்காக ஊழியர்கள் தங்களது மாதாந்திர ஊதியத்திலிருந்து 10 சதவீதப் பங்களிப்பை வழங்குவார்கள் எனவும்   இதற்கான மீதமுள்ள ஒட்டுமொத்தக் கூடுதல் நிதிச் சுமையைத் தமிழக அரசே முழுமையாக ஏற்கும் எனவும்  அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  ஓய்வூதியதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு 60 சதவீதத் தொகை குடும்ப ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

இவற்றுடன், தகுதியான சேவைக்கால நிறைவின் போது அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்கவும் இந்த புதிய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியதாரர்களுக்கும் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு முறைப்படி வழங்கப்படும் என நிதித்துறைச் செயலாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த புதிய ஓய்வூதியத் திட்ட அரசாணை வெளியீடு, அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் தற்பொழுது மிகப்பெரிய விவாதத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.