பேய் வேடங்கள் முதல் பிரம்மாண்ட அணிவகுப்பு வரை... ஹாலோவீனுக்காக விழாக்கோலம் பூண்ட நியூயார்க்... வைரல் வீடியோ!
அமெரிக்காவில் ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு, நியூயார்க் நகரம் வித்தியாசமான அலங்காரங்களால் களைகட்டியுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்களில் பேய் உருவங்கள், சூனியக்காரி பொம்மைகள், எலும்புக்கூடுகள், தானியங்கி கோமாளிகள் மற்றும் பூசணிக்காய் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.
சில பொம்மைகள், அருகில் வருபவர்களின் அசைவுக்கு ஏற்ப இயங்குவதுடன் அச்சமூட்டும் ஒலிகளையும் எழுப்புகின்றன. இந்த அலங்காரங்களைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வருகின்றனர்.
குழந்தைகள் பேய், சூனியக்காரி, சூப்பர் ஹீரோ உள்ளிட்ட வேடங்களை அணிந்து வீடு வீடாகச் சென்று இனிப்புகள் பெறும் 'ட்ரிக் ஆர் ட்ரீட்' நிகழ்ச்சியிலும் உற்சாகமாகப் பங்கேற்று வருகின்றனர்.
கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, 53-வது கிரீன்விச் வில்லேஜ் ஹாலோவீன் அணிவகுப்பு இன்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. மன்ஹாட்டனின் 6-வது அவென்யூவில் நடைபெறும் இந்த அணிவகுப்பில் பிரம்மாண்ட பொம்மைகள், இசைக்குழுக்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஹாலோவீன் வேடமணிந்த பொதுமக்களும் அணிவகுப்பில் கலந்துகொள்ளலாம். பார்வையாளர்கள் சாலையோரத்தில் நின்று இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.
